சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம்; ஓரிரு நாட்களில் அரசிடம் சி.ஐ.டி. இடைக்கால அறிக்கை தாக்கல்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக இன்னும் ஓரிரு நாட்களில் அரசிடம் சி.ஐ.டி. போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
பெங்களூரு:
தேர்வு முறைகேடு
கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர்கள், போலீஸ்காரர்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவாகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதானவர்களில் மகாந்தேஷ் பட்டீல், அவரது சகோதரர் ருத்ரேகவுடா பட்டீல் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
குறிப்பாக ருத்ரேகவுடா பட்டீல் தனக்கு தெரிந்தவர்கள், சாதி மற்றும் கட்சியை சேர்ந்தவர்கள் என்று ஒவ்வொருவருக்கும், தனியாக பணம் வாங்கியது தெரியவந்தது. அதாவது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் பாதுகாவலரான தேசாயிடம் இருந்து ரூ.30 லட்சத்தை ருத்ரேகவுடா பட்டீல் வாங்கியதாக தொிகிறது. இது வேறு சாதியை சேர்ந்தவர்களாக இருந்தால் ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.80 லட்சம் வரை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இடைக்கால அறிக்கை தாக்கல்
அதே நேரத்தில் மகாந்தேஷ் பட்டீல், தேர்வு எழுதிய நபர்களிடம் எதுவுமே பேசுவதில்லை என்றும், ருத்ரேகவுடா பட்டீல் தான் பேரம் பேசுவது, பணம் வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதற்காக வங்கி பரிமாற்றம் செய்யாமல் நேரடியாகவே பணத்தை வாங்கி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக முதல் கட்ட விசாரணையை போலீசார் முடித்திருப்பதாகவும், இன்னும் ஓரிருநாட்களில் அரசிடம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பா.ஜனதா பிரமுகர் திவ்யா, அரசு என்ஜினீயர் மஞ்சுநாத், காசிநாத் உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர். 18 நாட்களுக்கு மேலாக அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்பதே தெரியவில்லை. அவர்களை காப்பாற்ற நினைப்பதாக காங்கிரஸ் தலைவா்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள திவ்யா உள்ளிட்டோரை பிடிக்க சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர். அவர்களை பிடிக்க ஆந்திரா, கோவாவில் போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story