‘ரோட்டில் ஆங்காங்கே கிடந்த உடல்கள்


‘ரோட்டில் ஆங்காங்கே கிடந்த உடல்கள்
x
தினத்தந்தி 28 April 2022 2:18 AM IST (Updated: 28 April 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

தேர் மீது மின்சாரம் தாக்கியதில் பொத்து, பொத்தென கீழே சுருண்டு விழுந்தனர். ‘ரோட்டில் ஆங்காங்கே கிடந்த உடல்களை பார்த்தபோது எனது ஈரக்குலையே நடுங்கி விட்டது’ என் விபத்தை நேரில் பார்த்த பெண் கண்ணீர் மல்க கூறினார்.

தஞ்சாவூர், ஏப்.28-
தேர் மீது மின்சாரம் தாக்கியதில் பொத்து, பொத்தென கீழே சுருண்டு விழுந்தனர். ‘ரோட்டில் ஆங்காங்கே கிடந்த உடல்களை பார்த்தபோது எனது ஈரக்குலையே நடுங்கி விட்டது’ என் விபத்தை நேரில் பார்த்த பெண் கண்ணீர் மல்க கூறினார்.
கண் மூடி கண் திறப்பதற்குள்
 தீ விபத்தை நேரில் பார்த்த களிமேடு கிராமத்தை சேர்ந்த வசந்தா கண்ணீர் மல்க கூறியதாவது:-
எனக்கு தெரிந்தவரை இதுவரையில் இந்த விழாவில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. தேர் எங்கள் வீட்டின் அருகில் வந்ததும் தேங்காய் உடைத்து விட்டு வீட்டுக்குள் திரும்பி செல்ல முயன்றேன். அப்போது வாசல் படிக்கு கூட செல்லவில்லை. அதற்குள் டமால் டமால் என சத்தம் கேட்டது. 
உடனே திரும்பி பார்த்தன். அப்போது எனது கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. ஒரு வினாடிக்கு முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அழகுற காட்சி அளித்த தேர் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. தேரில் இருந்தவர்கள், தேரின் அருகே நின்றவர்கள் மற்றும் ரோட்டில் நின்று கொண்டு இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அதை பார்த்தபோது நடப்பது கனவா. அல்லது நனவா. என்று தெரியாத நிலை ஏற்பட்டது. கண் மூடி கண் திறப்பதற்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டது. 
ஈரக்குலையே நடுங்கி விட்டது
சற்று முன்பு உயிரோடு பார்த்தவர்கள் ரோட்டில் ஆங்காங்கே பிணமாக கிடந்ததை பார்த்து எனது ஈரக்குலையே நடுங்கி விட்டது.
இவ்வாறு அவர் கண்ணீர்மல்க கூறினார். 
பொத்து, பொத்தென கீழே விழுந்தனர்
களிமேடு கீழத்தெருவை சேர்ந்த கண்ணகி கண்ணீர் மல்க கூறும்போது, எங்கள் தெருவில் தேங்காய் உடைத்த பிறகு தேரை திருப்பினார்கள். அப்போது உயர் அழுத்த மின்கம்பியில் தேரின் அலங்கார தட்டி உரசியதை பார்த்ததும் எனது கணவர் திருஞானம், மின்கம்பியில் தேர் உரசுகிறது என சத்தம் போட்டபடி வேகமாக சென்றார். ஆனால் ஜெனரேட்டர் சத்தத்தில் எனது கணவர் கூறியது தேரை இழுத்தவர்களுக்கு கேட்கவில்லை. 
மின்கம்பியில் உரசியவுடன் மின்சாரம் தாக்கியதில் அனைவரும் பொத்து, பொத்தென கீழே விழுந்தனர். இதில் பலர் உயிரிழந்தனர். தண்ணீர் தெளிக்கப்பட்டு இருந்ததால் ரோட்டில் நின்ற எனது கணவர் மீதும் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அவர் உருண்டபடி மண்சாலைக்கு வந்ததால் உயிர் தப்பினார். படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறினார்.
தூரத்தில் நின்றதால் தப்பித்தோம்
களிமேட்டை சேர்ந்த மூதாட்டி தர்மாம்பாள் கூறும்போது, எனது உறவினர் ஒருவர் சமீபத்தில் இறந்து விட்டார். 16 நாட்கள் காரியம் நடப்பதற்கு முன்பு அப்பர் சுவாமிக்கு தேங்காய் உடைக்கக்கூடாது என்று கூறியதால் நாங்கள் 20 பேர் தேரின் அருகே செல்லாமல் தூரத்தில் நின்று விட்டோம். இல்லையென்றால் நாங்கள் எல்லோரும் தேரின் அருகேதான் நின்று இருப்போம். நான் கூட மின்சாரம் தாக்கி பலியாகி இருப்பேன். தூரத்தில் நின்றதால் தப்பித்தோம் என்றார்.
களிமேட்டை சேர்ந்தஆறுமுகம் என்பவர் கூறும்போது, கொரோனாவால் 2 ஆண்டுகள் அப்பர் சதயவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு 3 நாட்கள் நடைபெறுவதாக இருந்தது. எல்லா தெருவையும் சுற்றி வந்துவிட்டு மடத்திற்கு மீண்டும் செல்வதற்காக திருப்பியபோது மின்கம்பியில் உரசி விபத்து ஏற்பட்டது. தேர் இழுத்தவர்கள், தேங்காய் உடைத்தவர்கள், பூசாரி என 11 பேர் பலியாகி விட்டனர். இந்த துயர சம்பவத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றார்.

Next Story