திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை: லாரிகளை நிறுத்தி உரிமையாளர்கள்- தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை விதித்ததை கண்டித்து லாரிகளை நிறுத்தி உரிமையாளர்கள்-தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை விதித்ததை கண்டித்து லாரிகளை நிறுத்தி உரிமையாளர்கள்-தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக்கு தடை
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை விதித்தது குறித்து விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பண்ணாரி முதல் திம்பம் மலைப்பாதை வழியாக காய்கறிகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் எப்போதும் போல் செல்லலாம். உள்ளூர் கிராம மக்கள் அடையாள அட்டைகளை காண்பித்து பயணம் செய்யலாம். 12 சக்கர வாகனங்கள் மற்றும் 16.2 டன் எடைக்கு குறைவாக உள்ள வாகனங்கள் மட்டுமே திம்பம் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படும். 16.2 டன் எடைக்கு மேல் பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் எப்போதும் திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 11-ந் தேதி சத்தியமங்கலத்தில் கடையடைப்பு போராட்டமும், பண்ணாரி சோதனைச்சாவடி அருகில் காத்திருப்பு போராட்டமும் நடந்தது.. மேலும் ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் எதுவும் ஓடவில்லை.
காத்திருப்பு போராட்டம்
இந்த நிலையில் நேற்று திடீரென சத்தியமங்கலத்தில் அத்தாணி ரோட்டில் உள்ள ஒரு மைதானத்தில் ஏராளமான லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன.
இதுகுறித்து லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், ‘சத்தியமங்கலம் பகுதியில் மட்டும் 500 லாரிகள் உள்ளது. அந்த 500 லாரிகளில் 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். திம்பம் வழியாக லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் லாரி தொழிலாளர்கள் குடும்பத்தினர் அனைவரும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே திம்பம் மலைப்பாதை வழியாக அனைத்து ரக வாகனங்களும் செல்வதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் ஏராளமான லாரி தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதை தமிழக அரசினுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக லாரிகளை நிறுத்தி காத்திருப்பு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்’ என்றனர்.
Related Tags :
Next Story