சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
தலைவாசலில் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
தலைவாசல்:-
தலைவாசல் ஊராட்சி பட்டுதுறை ரோடு அம்மன் நகரில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 34-வது ஆண்டு தேரோட்ட விழா கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 108 பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு செய்தனர்.
மாலை 5 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டம் முக்கிய வீதி வழியாக வந்து இரவு 8 மணிக்கு தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. தேரோட்டத்தையொட்டி, தப்பாட்ட குழுவினர் ஆட்டம், பாட்டத்துடன் வந்தனர். வாணவேடிக்கை முழங்க தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் ஆகிய பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது. அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். தேரோட்டத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தலைவாசல் சுற்று வட்டாரத்தில் இருந்து திரண்டு வந்த பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். முடிவில் அன்னதானம் நடைபெற்றது. இரவில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
Related Tags :
Next Story