தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 April 2022 2:46 AM IST (Updated: 28 April 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

'தினத்தந்தி'க்கு பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஈஸ்வரதாசரப்பள்ளி கிராமத்தில் 150 வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் குறைந்த மின்அழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மரால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் அதிக மின்அழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மரை அமைத்தனர். தற்போது மின்வினியோகம் சீராக உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-சி.செந்தில், ஈஸ்வரதாசரப்பள்ளி, கிருஷ்ணகிரி.
சாக்கடை கால்வாயால் நோய் பரவும் அபாயம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து முள்ளுவாடி கேட் வரையிலான பிரட்ஸ் ரோட்டில் இருபுறமும் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், அரசு அலுவலர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு பிரட்ஸ் ரோட்டில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. கால்வாயில் குப்பைகள் அடைத்துக்கொண்டு இருப்பதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் யாரும் கண்டுகொள்வது இல்லை என்றும், கலெக்்டர் அலுவலகம் செல்லும் சாலையில் இப்படி சுகாதாரம் இல்லாமல் காட்சி அளிப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே மாநகராட்சி உயர் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-கண்ணன், பிரட்ஸ் ரோடு, சேலம்.
ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த சிவனப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள முத்துநாயக்கன் ஏரி சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சிலர் முத்துநாயக்கன் ஏரியை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அந்த கிராமத்திற்கு முத்துநாயக்கன் ஏரிதான் நீர் ஆதாரமாக திகழ்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சிவனப்பள்ளி, கிருஷ்ணகிரி.
 புழுதி பறக்கும் சாலை
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி அருகில் ரெயில் நிலைய சாலை தொடங்குகிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். சாலையை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஜல்லிக்கற்கள் மற்றும் மண் கொட்டப்பட்டுள்ள இந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறந்து புகை மண்டலம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக சாலையில் செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே இந்த சாலையை சீரமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.
-அழகேசன், தர்மபுரி.
ஆக்கிரமிக்கப்பட்ட சாலை
திருச்செங்கோட்டை அடுத்த தோக்கவாடிக்கு உட்பட்ட ஸ்ரீஅம்பாள் நகர் செல்லும் சாலையில் இருபுறமும் கற்களும், முட்களும், தென்னை மட்டைகளை போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும்,  இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் சிரமின்றி செல்ல ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
-ராஜேஷ், அம்பாள்நகர், திருச்செங்கோடு.
அடிக்கடி பழுதாகும் டவுன் பஸ்கள் 
சேலம் மாவட்டம் தலைாவசல் பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது. இதனால் பயணிகள் பஸ்சின் பின்புறத்தில் இருந்து தள்ளி பஸ்சை ஸ்டார்ட் செய்து இயக்க வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டவுன் பஸ்களில் அடிக்கடி ஏற்படும் பழுதை சரிசெய்து இயக்க வேண்டும்.
-முத்தழகன், தலைவாசல், சேலம்.
ஆபத்தான மின்கம்பிகள்
சேலம் மாவட்டம் எம்.பெருமாபாளையம் கிராமத்தை அடுத்த மயானம் செல்லும் வழியில் புதுக்குட்டை (ஏரி) பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்குகின்றன. இதனால் மயானத்திற்கு செல்லும் வாகனங்கள் அச்சத்துடனே செல்கின்றன. மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது மின்கம்பிகளை கம்பால் உயர்த்தி பிடித்தபிறகு தான் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மின் கம்பிகளை உயர்த்தி கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
-சி.செல்வம், மேட்டுப்பட்டி, சேலம்.
தெருநாய்கள் தொல்லை
சேலம் 12-வது வார்டு பிள்ளையார் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன. இரவு நேரங்களில் அந்த பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி சண்டை போடுகின்றன. இதனால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதனால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
-இளவரசன், கோர்டு ரோடு காலனி, சேலம்.
குடிநீர் பிரச்சினை
சேலம் சின்னதிருப்பதி ஆண்டாள் நகரில் 3 மாதங்களாக போதிய குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
-சுப்ரமணியம், ஆண்டாள்நகர், சேலம்.

Next Story