கோவில்பட்டி பஸ்நிலையத்தில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 3 வாலிபர்கள் கைது
கோவில்பட்டி பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர் சரமாரி அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர் சரமாரி அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுபோதையில் தகராறு
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது அய்யனேரியை சேர்ந்த கார்த்திக் (வயது 19) என்பவர் மது போதையில் மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாணவர்கள் அனைவரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை தாக்க முயன்றனர். இதனால் கார்த்திக் அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்.
மாணவருக்கு அரிவாள் வெட்டு
சிறிது நேரத்தில் கார்த்திக் அவரது நண்பர்களுடன் தன்னை தாக்க வந்த மாணவர்களை தேடி வந்து உள்ளார். அப்போது அந்த மாணவர்கள் அங்கு இல்லை. அதேசமயம், பஸ் நிலையத்தில் அதே கல்லூரியில் படிக்கும் கடலையூரைச் சேர்ந்த வைரமுத்து (வயது 19) என்பவர் நின்று கொண்டிருந்தார். கார்த்திக் தலைமையில் வந்த கும்பல், வைரமுத்து சூழந்து தாக்கியதுடன், அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதை தடுத்த வைரமுத்துவுக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டவுடன் பயணிகள் திரண்டுள்ளனர். மேலும் பெண்கள், மாணவிகள் பீதியுடன் அங்கும் இங்குமாக ஓடினர். இதை பார்த்த கார்த்திக் தலைமையிலான கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். காயமடைந்த வைரமுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
3 வாலிபர்கள் கைது
அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கார்த்தி என்ற அட்டுக் கார்த்தி (வயது19), சின்னமணி (வயது 24), அய்யநேரியை சேர்ந்த கார்த்திக் (வயது19) ஆகியோர் மாணவரை அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது கல்லூரி மாணவனை அரிவாளால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதாகியுள்ள கார்த்தி என்ற அட்டு கார்த்தி மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த பஸ் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் மாணவிகள் பஸ்சில் இறங்கும் போதும், பஸ்சுக்காக காத்திருக்கும் போதும் இதுபோன்ற வாலிபர்களின் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதை தவிர்க்க அந்த நேரங்களில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story