குழாயில் உடைப்பு... வீணாகும் குடிநீர்...!


குழாயில் உடைப்பு... வீணாகும் குடிநீர்...!
x
தினத்தந்தி 28 April 2022 9:51 PM IST (Updated: 28 April 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

சர்வீஸ் சாலை

கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை அருகே சர்வீஸ் சாலை வழியாக அண்ணாநகர், பகவதி பாளையம், சாலைப்புதூர், அப்துல் கலாம் நகர், செம்மொழி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி முடிவடையாமல் இருப்பதால், தற்போது குறுகலாக காணப்படுகிறது. 

இதற்கிடையில் அந்த சாலையின் கீழே கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்யும் அம்பராம்பாளையம் குடிநீர் குழாய் இணைப்பு செல்கிறது. அங்கு டி.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ள சாலையில் கீழ் பதிக்கப்பட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

வீணாகும் குடிநீர்

இதன் காரணமாக சர்வீஸ் சாலையில் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சர்வீஸ் சாலையில் இருந்த குழாயை கிணத்துக்கடவு பேரூராட்சி நிர்வாகத்தினர் சீரமைத்து சரி செய்தனர். 

ஆனால் இன்று திடீரென மீண்டும் அதே பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் ஓடியது. கோடைகாலம் தொடங்கி வறட்சி ஏற்பட்டு வரும் நிலையில், குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்வது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இரும்பு குழாய்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கிணத்துக்கடவில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலையில் பள்ளம் ஏற்படுகிறது.  

சமீபத்தில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியபோது தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார். தற்போது மீண்டும் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டு வருகிறது. இரும்பு குழாய்களை பதித்தால், அடிக்கடி உடைப்பு ஏற்படாது. எனவே நிரந்தர தீர்வு ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story