அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொழிலாளர் பற்றாக்குறையால் தாமதம்


அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொழிலாளர் பற்றாக்குறையால் தாமதம்
x
தினத்தந்தி 28 April 2022 9:51 PM IST (Updated: 28 April 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.41½ கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி, தொழிலாளர் பற்றாக்குறையால் தாமதமாகி வருகிறது.

பொள்ளாச்சி

குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.41½ கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி, தொழிலாளர் பற்றாக்குறையால் தாமதமாகி வருகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகள்

பொள்ளாச்சி அருகே கிட்டசூராம்பாளையத்தில் 4 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. அங்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்(குடிசை மாற்று வாரியம்) மூலம் ரூ.41 கோடியே 50 லட்சம் செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக பணிகள் நடைபெறவில்லை. இதனால் குடியிருப்புகள் கட்டும் பணி தாமதமாகி வருகிறது. இதன் காரணமாக கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் புதர்செடிகள் வளர்ந்து உள்ளன. இதற்கிடையில் வீடுகள் ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பணிகள் தாமதம்

கிட்டசூராம்பாளையத்தில் உள்ள 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பஞ்சமி நிலத்தில் 512 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. கட்டிட பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக ரூ.60 ஆயிரத்து 600 கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் கடந்த 3 மாதங்களாக பணிகள் நடக்காததால் அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமையாக கட்டி முடிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இது தவிர சிலர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கி கொடுப்பதாக பொதுமக்களிடம் வசூலில் ஈடுபடுவதாக தெரிகிறது. எனவே கட்டுமான பணி எப்போது முடியும் என்பது குறித்து பொதுமக்களுக்கு, அதிகாரிகள் விளக்க வேண்டும். நிறுத்தப்பட்டு உள்ள பணிகளை விரைவில் தொடங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தகுதியான பயனாளிகள்

இதுகுறித்து நகர்ப்புற வாழ்விட வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த 3 மாதங்களாக பணிகள் நடைபெறவில்லை. தற்போது அந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டு உள்ளதால் மீண்டும் பணிகள் தொடங்க உள்ளது.

இதையொட்டி குடியிருப்பு பகுதிகளில் உள்ள செடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றனர்.


Next Story