வன உரிமை சட்ட ஆலோசனை
பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் வன உரிமை சட்ட ஆலோசனை நடைபெற்றது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் வன உரிமை சட்ட ஆலோசனை நடைபெற்றது.
வன உரிமைகள் கூட்டம்
பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் வன உரிமை சட்டத்தில் உள்ள சமூக வன உரிமைகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வன உரிமை சட்டத்தில் உள்ள வன உரிமைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன், ஆதிதிராவிட நலத்துறை மாவட்ட அலுவலர் ராம்குமார், தனி தாசில்தார் முருகேசன், வனச்சரகர்கள் புகழேந்தி, மணிகண்டன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சமூக வன உரிமைகள் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆதாரம் தேவையில்லை
வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதற்கு கடந்த 2006-ம் ஆண்டு வன உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் உரிமைகளை பெறுவதற்கு 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந்தேதி முன்பு வரை வனப்பகுதியில் வசித்து இருக்க வேண்டும். மேலும் எஸ்.டி. பிரிவினருக்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. மற்ற பிரிவினர் 75 ஆண்டுகள் வசித்ததற்கு உள்ள ஆதாரத்தை கொடுக்க வேண்டும்.
தனி நபர் உரிமை, சமுதாய உரிமை, வளர்ச்சிக்கான உரிமைகளும் உள்ளன. அதன்படி தனி நபர் உரிமையில் மருத்துவ செடிகள், மூங்கில்கள், குச்சி, கூடுகள், தேன், மெழுகு, கிழங்கு வகைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பயன்படுத்தி கொள்ளலாம். சிறு வன மகசூல் பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்யலாம். மாடு மேய்த்தல், நீர்நிலைகளை பயன்படுத்தல், மீன் பிடித்து விற்பனை செய்தல், விறகு சேகரிக்கலாம்.
அனுமதி பெற வேண்டும்
சமுதாய உரிமையில் பழக்கவழக்கத்தில் உள்ள பாரம்பரியமாக மூதாதையர்கள் வழிப்பட்ட கோவில்களில் வழிபாடு நடத்தி கொள்ளலாம். வனவிலங்குகளை வேட்டையாடுதல், கன்னி வைத்தல் சட்டப்படி குற்றமாகும். கிராம வளர்ச்சிக்கு தேவையான மேம்பாட்டு திட்டங்கள் குறித்து கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றி வனத்துறை, ஆதிதிராவிட நலத்துறை, ஊரக வளர்ச்சி துறைக்கு அனுப்பலாம்.
வன நிலமாக இருந்தால் பணிகள் மேற்கொள்ள வனத்துறை அனுமதி பெற வேண்டும். பள்ளிகள் கட்டுவதற்கு ஒரு ஹெக்டேருக்கு குறைவான இடத்தில், அவசியம் இருந்தால் மட்டும் குறிப்பிட்ட மரங்களை அகற்றி கொள்ளலாம். ஆஸ்பத்திரி, அங்கன்வாடி, மின்சாரம், குடிநீர், தடுப்பணைகள், வாழ்வாதாரத்திற்கான பயிற்சி கூடம் ஆகியவற்றை செயல்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story