கால்நடை உதவியாளர் நேர்காணல் நிறுத்தப்பட்டதால் சாலை மறியல்


கால்நடை உதவியாளர் நேர்காணல்  நிறுத்தப்பட்டதால் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 April 2022 10:14 PM IST (Updated: 28 April 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

கால்நடை உதவியாளர் பணிக்காக நேர்காணலுக்கு வந்தவர்கள் திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

திருப்பத்தூர்

கால்நடை உதவியாளர் பணிக்காக நேர்காணலுக்கு வந்தவர்கள் திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

தற்காலிக நிறுத்தம்

திருப்பத்தூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை உதவியாளர் பணிக்கு 19 பேரை தேர்வு செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நேர்காணலுக்கு 3,100 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 

அவர்களுக்கு 26-ந்தேதி திருப்பத்தூர் அருகே ஆசிரியர் நகரில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் தினமும் 600 பேர் வீதம் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். 

அதன்படி இன்று நேர்காணலுக்கு 600 பேர் வந்தனர். நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் பலகையில் எழுதி வைக்கப்பட்டு இருந்தது. 

இதைப் பார்த்ததும் நேர்காணலுக்கு வந்தவர்கள் ஆத்திரம் அடைந்து, திருப்பத்தூர்-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் எங்களுக்கு ேநர்காணல் நடத்த வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

நேர்காணல் நடத்த வேண்டும்

கடந்த 2 நாட்களாக நேர்காணல் நடத்தி விட்டு, எங்களுக்கு மட்டும் கால்நடை உதவியாளர் நேர்காணல் முடிந்து விட்டதாகக் கூறுகிறார்கள். நாங்கள் சென்னை, வேலூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ளோம்.

2019-ம் ஆண்டு இதேபோல் சென்னையில் நேர்காணல் நடத்தினார்கள். அங்குச் சென்றபோதும், இதேபோல் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்கள். எங்களுக்கு நேர்காணல் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் மற்றும் டவுன் போலீசார் நேரில் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

 இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகாரி தகவல்

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் நாசர் கூறியதாவது:-

கால்நடை பராமரிப்பு மற்றும் மருந்தகம் ஆணையர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணலை உடனடியாக நடத்தி கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட அனைத்து கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் தற்போது கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், எனக் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் ஆணையர் ஞானசேகரன் மூலம் தெரிவிக்கப்பட்டதையொட்டி நேர்காணல் நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story