இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை


இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 28 April 2022 10:20 PM IST (Updated: 28 April 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருவட்டார்:
திருவட்டார் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 
இளம்பெண்
 திருவட்டார் அருகே மணலிக்கரை எல்லம்மாவிளையை சேர்ந்தவர் வினு(வயது 31). இவருக்கும் மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை திவண்டக்கோட்டையை சேர்ந்தவர் ரெத்தினம் மகள் விஜி (30) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4½ வயதில் ஒரு மகள் உள்ளார். விஜி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். 
இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக விஜி மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். 
பூச்சிக்கொல்லி மருந்தை...
இந்தநிலையில் சம்பவத்தன்று விஜி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு விஜி பரிதாபமாக இறந்தார். 
பின்னர், இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கபெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே தற்கொலை செய்த விஜிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். 
மற்றொரு சம்பவம்
திருவட்டார் அருகே ஓடலிவிளையை சேர்ந்தவர் பாபு (45), கட்டிட தொழிலாளி. இவருக்கு கலா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பாபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார். தற்போது, பாபு சொந்தமாக புதிய வீடு கட்டி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர், வெளியே சென்றவர் அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை, இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் புதிய வீட்டுக்கு சென்றபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாபு தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், இதுபற்றி திருவட்டார் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருவட்டார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story