போதிய வகுப்பறை இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்
பல்லடம் அருகே கரைப்புதூரில் உள்ள அரசு பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
பல்லடம், ஏப்.29-
பல்லடம் அருகே கரைப்புதூரில் உள்ள அரசு பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
போதிய வகுப்பறை இல்லை
பல்லடம் அருகே கரைப்புதூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 603 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே வகுப்பு நடத்தப்படுவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
கரைப்புதூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளிக்கு போதுமான வகுப்பறை கட்டிடங்கள் இல்லை. இதுகுறித்து பலமுறை கல்வித்துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றில் புகார் தெரிவித்தும் இதுவரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.
கல்வி பாதிக்கும் அபாயம்
வகுப்பறைகள் இல்லாததால், வாரத்தில் 3 நாட்களுக்கு தமிழ் வழிக்கல்வியும், மீதி 3 நாட்களுக்கு ஆங்கில வழிக்கல்வியும் கற்பிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் உள்ளது. மெயின் ரோட்டின் இருபுறங்களிலும் வகுப்பறைகள் உள்ளதால், ரோட்டை கடக்கும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும் தலைமையாசிரியர் இடம் மாறுதல் செய்யப்பட்டு கடந்த 1 வருடத்திற்கு மேலாகியும் இன்னும் தலைமையாசிரியர் நியமிக்கப்படவில்லை, ஆசிரியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. எனவே கல்வித்துறை, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க வகுப்பறை, ஆசிரியர்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story