மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு அரங்கம், சிலை


மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு அரங்கம், சிலை
x
தினத்தந்தி 28 April 2022 10:40 PM IST (Updated: 28 April 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு அரங்கம், சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

மயிலாடுதுறை
தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பர துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் ரூ.3 கோடியில் அரங்கம், சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பை மயிலாடுதுறை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் வரவேற்றுள்ளனர்.
தமிழில் முதல் நாவல்
திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம்குளத்தூரில் 1826-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி பிறந்தவர் சாமுேவல் வேதநாயகம் பிள்ளை, மாயூரம் முன்சீப் வேதநாயகம் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் மாயூரம் மாவட்ட முன்சீப்பாக பணியாற்றுவதற்காக மாயூரத்திற்கு(தற்போது மயிலாடுதுறை) குடிபெயர்ந்தார். 
ஆங்கிலத்தில் இருந்த சட்ட நூல்களை தமிழில் மொழி பெயர்ப்பதில் கருவியாக திகழ்ந்தவர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை. மாயூரம் நகராட்சி சேர்மனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் தமிழில் முதல் நாவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வரவேற்பு
வரலாற்று ஆசிரியர் ‘கோமல்‘ அன்பரசன் இந்த அறிவிப்பை வரவேற்று கூறுகையில், அரசு பணியாளரான வேதநாயகம் பிள்ளை, பஞ்ச காலங்களில் மக்களுக்கு மிகவும் துணை புரிந்தவர். மேலும் பெண்களுக்கு என்று பள்ளிக்கூடம் ஒன்றும் தொடங்கியவர் என்றார். 
திருச்சியில் பிறந்து மயிலாடுதுறை மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவர் வேதநாயகம் பிள்ளை என்றும் பாராட்டினார். நீதித்துறையில் இவர் ஆற்றிய பணிகள் சென்னை ஐகோர்ட்டு மற்றும் மயிலாடுதுறை கோர்ட்டால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியது
சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் கூறுகையில், முன்சீப் வேதநாயகம் பிள்ளைக்கு நினைவு மண்டபம் வேண்டி நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அரங்கம் மற்றும் சிலை அமைப்பதற்கு ரூ.3 கோடி அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.  வேதநாயகம் பிள்ளை சட்டம் மற்றும் இலக்கிய துறைக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்றார்.
மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளையை அங்கீகரித்து நினைவு மண்டபம் அமைக்க பத்து ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வந்துள்ளோம். அரசின் இந்த அறிவிப்பை மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது என்று அரசு வக்கீல் சேயோன் தெரிவித்தார். முன்சீப் வேதநாயகம், பஞ்ச காலங்களில் தன்னுடைய சொந்த ஊதியத்தை மக்களுக்காக செலவழித்து உதவிபுரிந்ததாகவும் கூறினார். மயிலாடுதுறை ஆன்மிக கூட்டமைப்பின் பிரதிநிதியாகவும் செயல்படும் சேயோன், கிறிஸ்தவரான சாமுவேல் வேதநாயகம் பிள்ளை, திருவாவடுதுறை ஆதீனத்துடன் நல்ல நட்பில் இருந்ததாகவும் இது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

Next Story