பயிர் சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
பயிர் சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து உடுமலை வேளாண்மைத் துறையினர் வழிகாட்டியுள்ளனர்.
போடிப்பட்டி
பயிர் சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து உடுமலை வேளாண்மைத் துறையினர் வழிகாட்டியுள்ளனர்.
இதுகுறித்து உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-
கூட்டுப்புழுக்கள்
"உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையைப் பயன்படுத்தி சரிவுக்கு குறுக்காக கோடை உழவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது மழைநீர் மண்ணின் உட்புறத்தில் எளிதாக செல்ல முடிகிறது. இதனால் மண் வளம் மேம்படுவதுடன் நிலத்தடி நீர்மட்டம் சீரடைகிறது.
கோடை உழவு செய்வதால் கீழ் மண் மேலாகவும் மேல் மண் கீழாகவும் புரட்டப்படுகிறது. அப்போது மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் மண்ணின் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு வெயிலின் மூலமும் பறவைகளின் மூலமாகவும் அழிக்கப்படுகிறது.
கவர்ச்சிப் பயிர்
கோடை காலத்தின் கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். இதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்களில் இருந்து வரும் தீங்கு செய்யும் பூச்சிகள் செயலிழந்து முட்டையிடும் திறனை இழந்து விடுகிறது. மேலும் முதன்மைப் பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் விதமாக கவர்ச்சிப் பயிராக வரப்புப் பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.
உதாரணமாக முதன்மைப்பயிராக மக்காச்சோளம், சோளம், நெல் போன்ற பயிர்களை விதைக்கும் போது வரப்புகளில் பயறு வகைப் பயிரான உளுந்து ஏக்கருக்கு 2 கிலோ வீதம் விதைத்து தீங்கு செய்யும் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். இதுபோல உளுந்து, தட்டைப்பயறு, பாசிப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை முதன்மைப்பயிராக சாகுபடி செய்யும் போது சோளம் விதைகளை வரப்பு ஓரங்களில் விதைத்து தீங்கு செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். மேலும் பூச்சிக் கொல்லிகள், பூஞ்சாணக் கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைக் குறைத்து, பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கக் கூடிய இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்தி தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
இவ்வாறு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளைக் கடைபிடித்து பூச்சி நோய்களில் இருந்து பயிர்களைப் பாதுகாத்து சிறந்த மகசூல் பெறலாம்"என்று அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story