தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கலெக்டர் ஆய்வு
தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
மணல்மேடு
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த தலைஞாயிறு கிராமத்தில், நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலை சிறப்பாக செயல்பட்டது. ஆனால், விரிவாக்கப்பணியில் ஏற்பட்ட முறைகேடு மற்றும் தொடர் பழுது காரணமாக ஆலை நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆலை சரிவர இயங்கவில்லை. இதனால், ஆலையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் கரும்பு அரவை நிறுத்தப்பட்டது. விவசாயிகளின் நலன்கருதி இந்த ஆலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள், ஆலை ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதன் காரணமாக ஆலையை மீண்டும் இயக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, நேற்று முன்தினம் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள், அரவைக்கு தேவையான கரும்பை உற்பத்தி செய்து தருவதாக உறுதியளித்தனர். ஆய்வின்போது, கோட்டாட்சியர் பாலாஜி, தாசில்தார் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், ஊராட்சித் தலைவர் சேரன் செங்குட்டுவன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story