சிறுமி குளிப்பதை பார்த்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகை அருகே சிறுமி குளிப்பதை பார்த்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாய், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார்.
வெளிப்பாளையம்:
நாகை அருகே சிறுமி குளிப்பதை பார்த்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாய், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தை சேர்ந்த பெண் ஒருவர், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
என் கணவர் உடல் நிலை சரியில்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் உள்ளார். எங்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் 16 வயது மகள் குளிக்கும்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர் மறைந்து இருந்து பார்த்துள்ளார்.
குளிப்பதை பார்க்கிறார்
இதுகுறித்து அவரது மனைவியிடம் தெரிவித்து அவரை கண்டிக்குமாறு கூறினோம். ஆனால் அவர் மீண்டும் எனது மகள் குளிப்பதை மறைந்திருந்து பார்த்துள்ளார். இதை என் மகள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை அறிந்த அந்த நபர் கடந்த 10-ந் தேதி மாலை 4 மணியளவில் எங்கள் வீட்டிற்குள் புகுந்து, வீட்டில் தனியாக இருந்த எனது மகளை உருட்டு கட்டையால் தாக்கி அவரது கழுத்தில் அணித்திருந்த 1½ பவுன் சங்கிலி மற்றும் 2 செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றார்.
அப்போது வெளியே சென்று வீட்டுக்கு வந்த எனது கணவரையும் தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற போது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அங்கு வந்ததால், ஒரு செல்போனை மட்டும் கொடுத்தார். மகள் வீடியோ எடுத்த செல்போனை கொடுக்க முடியாது என்று கூறி சென்று விட்டார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
தாக்குதலில் காயம் அடைந்த எனது கணவரும், மகளும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனது மகள் குளிப்பதை மறைந்திருந்துபார்த்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story