கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழியில் 1,500 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்


கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழியில் 1,500 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 April 2022 11:12 PM IST (Updated: 28 April 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரியில் 1500 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள், 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரியில் 1500 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள், 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரகசிய தகவல்
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
 இதனையடுத்து ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் தனிப்படை போலீசார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். 
1,200 கிலோ குட்கா, புகையிலை
அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் ஒரு வேனும், அதற்கு முன்னும் பின்னுமாக 2 கார்களும் வந்தன. உடனே போலீசார் வேன் மற்றும் 2 கார்களையும் மறித்து சோதனை செய்தனர். அதில் மூடை மூடையாக 1200 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
உடனே, போலீசார் அந்த வேன் மற்றும் பாதுகாப்புக்கு வந்த 2 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அதில் வந்தவர்களையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில், பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்கு கடத்திச் செல்ல முயன்றதும், ஈரோட்டை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 34), லெட்சுமணன் (23), ரஸ் ஜஸ்வந்த்சிங் (25), சேலத்தை சேர்ந்த அசோக் (30), விஜயகுமார் (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கன்னியாகுமரி
நேற்று முன்தினம் இரவு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் தலைமையிலான போலீசார்  கன்னியாகுமரி கோவளம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கலைச்செல்வன் (27) என்பதும், தற்போது புத்தளத்தில் ஒரு வீட்டில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
 இதையடுத்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று அங்கிருந்த 325 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.41 ஆயிரத்து 200-ம் பறிமுதல் செய்தனர்.பின்னர், பறிமுதல் செய்த குட்கா, பணம், அந்த வாலிரையும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வனை கைது செய்தார்.

Next Story