சீமானூரில் ஜல்லிக்கட்டு: காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர் 23 பேர் காயம்


சீமானூரில் ஜல்லிக்கட்டு: காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர் 23 பேர் காயம்
x
தினத்தந்தி 28 April 2022 11:40 PM IST (Updated: 28 April 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

சீமானூரில் நடைெபற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். இதில் 23 பேர் காயமடைந்தனர்.

கீரனூர்:
ஜல்லிக்கட்டு 
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா சீமானூரில் அய்யனார் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
இதில் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த 927 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
23 பேர் காயம் 
காளைகள் முட்டியதில் ராப்பூசலை சேர்ந்த சுதாகர் (வயது 28), கோவில் வீரக்குடியை சேர்ந்த முருகேசன் (44), உப்பிலியக்குடியை சேர்ந்த சரவணன் (27), குமரபட்டியை சேர்ந்த பழனிச்சாமி (24), சூரியூரை சேர்ந்த மணி (19) ஆகிய வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் 9 பேர், பார்வையாளர் 2 பேர் உள்பட 23 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பரிசு பொருட்கள் 
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், வெள்ளி நாணயம், மின்விசிறி, எவர்சில்வர் பாத்திரங்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டை மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, விராலிமலை, கீரனூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன் தலைமையில், கீரனூர், புதுக்கோட்டை போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story