திருவண்ணாமலை
சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டு திருவண்ணாமலை கிளை சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி திடீரென உயிரிழந்தார். அவரை போலீசார் அடித்துக்கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சாராயம் விற்றதாக வழக்கு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா இளையங்குன்னியை அடுத்த தட்டரணை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 48). இவரது மனைவி மலர். இவர்களுக்கு திருமூர்த்தி, தினகரன் என 2 மகன்களும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். நந்தினிக்கு திருமணம் ஆகிவிட்டது.
திருமூர்த்தி ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவருக்கு இன்னும் ஒரு சில வாரங்களில் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. தினகரன் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தங்கமணி சாராய வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 26-ந்தேதி காலையில் தங்கமணி வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்த போது, அவரது வீட்டிற்கு வந்த திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீசார் சாராய விற்பனை தொடர்பாக தங்கமணியை விசாரணை நடத்திவிட்டு அனுப்பி விடுவதாக வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துவிட்டு, அவரை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அன்று மாலையில் சாராயம் விற்றதாக வழக்குப்பதிவு செய்து தங்கமணியை போலீசார் கைது செய்து, திருவண்ணாமலை கிளை சிறையில் அடைத்தனர்.
திடீர் உடல்நலக்குறைவு
சிறையில் இருந்த அவருக்கு நேற்று முன்தினம் காலையில் திடீரென உடல்நல குறைபாடு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து மதியம் 1 மணி அளவில் மீண்டும் அவர் மருத்துவமனையில் இருந்து அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் தங்கமணிக்கு உடல் நலம் சரியில்லை என்று போலீசார் அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மீண்டும் மாலை 4 மணி அளவில் தங்கமணிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டு உள்ளது. உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உறவினர்கள் குற்றச்சாட்டு
திடீரென ஏற்பட்ட வலிப்பு காரணமாக தங்கமணி உயிரிழந்ததாக போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தங்கமணியின் உறவினர்கள், அவருக்கு இதுவரை வலிப்பு வந்ததே இல்லை. போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று அவரை கடுமையாக தாக்கியதால் தான் அவர் உயிரிழந்தார் என்று குற்றம்சாட்டினர்.
இதனால் தட்டரணை பகுதியில் நேற்று முன்தினம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க நேற்று முன்தினம் இரவு முதல் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்ட போது, தங்கமணி மீது 18 சாராய வழக்குகள் உள்ளன. மேலும் ஒரு சாராய வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் அதிர்ச்சியில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு உள்ளது. வலிப்பின் காரணத்தினால் தான் அவர் உயிரிழந்தார். போலீசார் யாரும் அவரை அடிக்கவில்லை என்றனர்.
இந்த நிலையில் நேற்று தங்கமணியின் மனைவி, மகன்கள், மகள் மற்றும் உறவினர்களுடன் வந்து விசாரணைக்கு அழைத்து சென்றவரை அடித்துக்கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்தனர்.
அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் திருவண்ணாமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜகாளீஸ்வரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். போலீசார் அவர்களை உள்ளே செல்ல விடாமல் நுழைவுவாயில் இரும்பு கேட்டை அடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர்கள் கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்துவிட்டு தான் செல்வோம் என்று கூறினர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கேட் திறக்கப்பட்டது. காலை 11 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்திற்கு கலெக்டர் முருகேஷ் வந்தார்.
பொய் வழக்கு
அதைத் தொடர்ந்து அவர்கள் கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது தங்கமணியின் மனைவி மற்றும் மகள் கதறி அழுதனர். பின்னர் அவர்களிடம், கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கூடுதல் கலெக்டர் பிரதாப் உடனிருந்தார்.
இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர்கள் கூறுகையில், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும், எங்கள் பகுதிக்கு நேரில் வந்து விசாரணை நடத்துவதாகவும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் கலெக்டர் தெரிவித்ததாக கூறினர்.
மேலும் அவர்கள், தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீசார் 2 பேர் மற்றும் திருவண்ணாமலை சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை என்ற பெயரில் அழைத்து வந்து லஞ்சம் கேட்டு, அதை கொடுக்காததால் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து தங்கமணியை அடித்து சித்ரவதை செய்து மரணம் ஏற்படுத்தியதால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
உடலை வாங்க மறுப்பு
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாலை திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
மேலும் தங்கமணியின் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். இதையடுத்து தங்கமணியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான பணி நடைபெற்றது.
இதற்கிடையில் அவரது உறவினர்கள், தங்கமணியின் முகம் மற்றும் கையில் காயங்கள் உள்ளது. அவரது சாவில் சந்தேகம் உள்ளது. எனவே பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் நாங்கள் உடலை வாங்குவோம். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் தங்கமணியின் உடலை வாங்காமல் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உயிரிழந்தவரின் மனைவி கலெக்டரிடம் பரபரப்பு புகார்
தங்கமணியின் மரணம் தொடர்பாக அவர் மனைவி மலர், திருவண்ணாமலை கலெக்டர் முருகேசிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுவிலக்கு பிரிவு போலீசார் எங்கள் ஊர் மக்களை தொடர்புகொண்டு சாராயம் காய்ச்ச சொல்லியும், மாதந்தோறும் ரூ.1 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் ஊர் மக்கள் அனைவர் மீதும் குண்டர் சட்டம் போட்டு சிறையில் தள்ளிவிடுவோம் என்றும் மிரட்டி வந்தார்கள்.
அதேபோல் எங்கள் ஊரை சேர்ந்த 2 பேர் மீது பொய்யாக குண்டர் சட்டத்தில் வழக்கு போட்டுவிட்டார்கள். இதேபோன்று என் கணவரையும் (தங்கமணி) மிரட்டி பணம் பறிக்க முயன்றார்கள். என் கணவரோ நாங்கள் எந்த குற்றச்செயலும் செய்யவில்லை. அதனால் லஞ்சம் தர முடியாது என்று கூறிவிட்டார். இதையடுத்து என் கணவர் மீது பொய்வழக்கு போட்டு திருவண்ணாமலை கிளை சிறையில் அடைத்தனர். அங்கு அவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலதிகாரிகளிடம் எதுவும் சொல்லக்கூடாது என எங்களை மிரட்டுகின்றனர்.
எனது கணவர் மரணத்துக்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 போலீசார் மற்றும் சிறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.