வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
வனப்பகுதிக்குள் மலைமாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க கோரி மலைமாடுகளுடன் வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்திராயிருப்பு
வனப்பகுதிக்குள் மலைமாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க கோரி மலைமாடுகளுடன் வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மலை மாடுகள்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளைக் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானை, புலி, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி புலிகள் அதிகம் உள்ள பகுதி என கண்டறியப்பட்டு கடந்தவருடம் இப்பகுதியினை மேகமலை புலிகள் சரணாலயமாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பை சுற்றியுள்ள மலை அடிவார கிராமப்பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடை மலை மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கிடை மலை மாடுகளை இங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தான் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார்கள்.
ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் மேய்ச்சலுக்கு கிடை மலை மாடுகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்லக்கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் வனத்துறையினர் மலை மாடுகளை மலைப்பகுதிகளில் மேய்க்க அனுமதிப்பதில்லை. அப்படி மீறி சென்றாலும் மாட்டை மேய்ச்சலுக்கு அழைத்து செல்பவர்களை கைது செய்து அபராதம் விதித்து வருவதால் வனத்துறையினரும், பொது மக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்தநிலையில் கிடை மலை மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும், கோர்ட்டு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வத்திராயிருப்பு தாலுகா அலுவலகம் முன்பு மாடுகளுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மனு
மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தினால் வத்திராயிருப்பில் இருந்து அர்ச்சுனாபுரம் செல்லும் சாலை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் மணிக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் முருகன், தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்தையா, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சுந்தரபாண்டியன், மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தின் நிர்வாகிகள் சுரேஷ்குமார், ராதாகிருஷ்ணன், மாரிமுத்து, கருப்பையா, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story