தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை ஆங்காங்கே சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பதனால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா?
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சேங்கல் ஊராட்சி மாணிக்கபுரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி அதில் இருந்து குழாய்கள் மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆதிதிராவிடர் காலனியில் இருந்து ஜெகதாபி செல்லும் சாலையில் உள்ள குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மாணிக்கபுரம், கரூர்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
கரூர் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சி வடக்கு மாடுவிழுந்தான்பாறையில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின் இணைப்பு வழங்க மின் மாற்றியில் இருந்து மின்கம்பம் அமைத்து குடியிருப்பு பகுதிக்கு மேல் குறுக்கே மின்கம்பி மற்றும் வயர்கள் சென்று அடுத்த மின்கம்பத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வழியாக செல்லும் மின் கம்பி மற்றும் வயர்கள் தாழ்வாக உள்ளன. இது வீடுகளில் உரசி வருவதால் உயிர் சேதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தாழ்வாக இருக்கும் மின் கம்பி மற்றும் வயர்களை மாற்றி அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வடக்கு மாடுவிழுந்தான்பாறை, கரூர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், கரடிக்காடு ஆர்.சி.பள்ளி பின்புறம் செல்லும் வழியில் செல்லக்கூடிய மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் இந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் மின்கம்பிகள் மீது வாகனங்கள் உரசினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கரடிக்காடு, புதுக்கோட்டை.
சிதிலமடைந்த சிறுவர் பூங்கா
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் மெய்நின்றநாதர் ஆலயத்தின் தண்ணீர் தடாகத்தின் நடுவே 81 அடி உயரம் கொண்ட சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன. இவை தற்போது சிதிலமடைந்து காணப்படுகின்றன. மேலும் குழந்தைகள் அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விபத்தும், காயங்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து விளையாட்டு உபகரணங்களை சீரமைத்துத்தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரமங்கலம், புதுக்கோட்டை.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி பாரதியார் சாலையில் உள்ள ரெயில்வே திருமண மண்டபத்தையொட்டி சாலையோரத்தில் பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதில் விழுந்து காயம் அடையும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் இருந்த பள்ளத்தில் மண்ணை கொட்டி நிரப்பியுள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், திருச்சி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி காந்தி மார்க்கெட்டில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் மார்க்கெட்டிற்கு வரும் மக்கள் நிலைதடுமாறி விழுந்து வருகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதினால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காந்திமார்க்கெட், திருச்சி.
தபால் பெட்டி வைக்கப்படுமா?
திருச்சி உக்கடை அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர்களுக்கு கடிதம் உள்ளிட்டவை அனுப்ப வேண்டும் என்றால் இப்பகுதியில் அஞ்சல் பெட்டி இல்லை. இதனால் வயது முதிர்ந்தவர்கள் தபால் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியமங்கலம், திருச்சி.
குளம் ஆக்கிரமிப்பு
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, பிராம்பட்டி கிராமம் (தெற்கு) வ.கைகாட்டி பஸ் நிலையம் அருகே உள்ள செட்டிக்குளம் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பு பகுதியாக மாறி வருகிறது. இதனால் மழைபெய்யும்போது இந்த குளத்தில் மழைநீர் தேங்காத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பிராம்பட்டி, திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய வா ர்டு எண் 58 பகுதியில் அமைந்துள்ள கிராப்பட்டி, அன்பு நகர் மற்றும் அருணாச்சலம் நகர்களுக்கு பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்தும் கடந்த 4 மாதங்களாக சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் மக்கள் நடப்பதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் மிகுந்த சிரமப்பட்டு பல விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அன்பு நகர், திருச்சி.
Related Tags :
Next Story