கரும்பு நடவு முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்
கரும்பு நடவு முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
அரியலூர்,
கரும்பு சாகுபடி
அரியலூர் மாவட்டத்தில் கரும்பு பயிர் 11,250 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில் பெரும்பாலும் இருபருக்கரணை முறையில் கரும்பு நடவு செய்யப்படுகிறது. செம்மை கரும்பு சாகுபடி முறையும் விவசாயிகளிடையே குறைந்த பரப்பில் பின்பற்றப்படுகிறது. தற்போது எந்திர நடவு முறை மற்றும் மேம்படுத்தப்பட்ட நடவு முறைகளை கரும்பில் பின்பற்றுவதால் சாகுபடி செலவு குறைவதுடன் கூடுதல் மகசூல் பெறலாம்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக எந்திர நடவு கருவி நாள் ஒன்றிற்கு 1.5 எக்டா் பரப்பளவு நடவு செய்கிறது. மனித ஆற்றலை குறைக்கிறது மற்றும் விதை அளவு எக்டருக்கு 5 டன்னாக குறைக்கிறது. இணை வரிசை நடவு முறையில் இரண்டு புறமும் கரணைகளை 150+30 செ.மீ. இடைவெளியில் அஸ்ட்ராப் 8,000 வகை (அறுவடை எந்திரம்) கொண்டு அறுவடை செய்யுமாறு நட வேண்டும். 150+30 செ.மீ. இடைவெளியில் நியு+ ஹாலண்ட் 4,000 வகை அறுவடை எந்திரம் கொண்டு அறுவடை செய்யுமாறு ஒரு வரிசையில் நடவு செய்ய வேண்டும்.
சொட்டு நீர் பாசனம்
நிலத்தடி சொட்டு நீர் பாசன முறையில் கரும்பை பயிர் செய்யும்போது சொட்டு நீர் குழாய்களை 20 செ.மீ. ஆழத்தில் வாய்க்காலில் பதிக்க வேண்டும். விதை கரணைகளை சொட்டு நீர் குழாய்க்கு 5 செ.மீ. மேல் இருக்குமாறு பதிக்க வேண்டும். செம்மை கரும்பு சாகுபடியில் 25-35 நாட்கள் வளர்ந்த நாற்றுகளை 5X2 அடி இடைவெளியில் விளைநிலத்தில் நட்டு சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும். பரந்த இடைவெளி கரும்பு சாகுபடியில் ஊடுபயிராக தக்கைப்பூண்டு மற்றும் சணப்பை பயிரிடுவதின் மூலம் மண் வளம் மேம்படும். மேலும், களைகளை கட்டுப்படுத்தலாம். இது இளங்குருத்து புழு நோய் நிகழ்வை குறைத்து கரும்பு விளைச்சலை அதிகரிக்கிறது.
கடின மண்ணில் வரப்பில் கரணைகளை 80 செ.மீ. இடைவெளியில் நடுவதின் மூலம் கரணை அழுகல் நோயை தவிர்க்கலாம். வளர்ச்சியும் நன்றாக இருக்கும். நடவு செய்த 3 நாட்களுக்குள் வரப்பின் எதிர் திசையில் 10 செ.மீ. இடைவெளியில் ரைசோபியம் கொண்டு விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை எக்டருக்கு 10 கிலோ அளவு விதைக்க வேண்டும். அதிக இடைவெளியுள்ள பயிர்களில் நடவு செய்த 50 முதல் 60 நாட்களில் பசுந்தாளை உழுதுவிட வேண்டும்.
வேலைப்பளுவை குறைக்கிறது
நடவு செய்த 90 முதல் 100-வது நாளில் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்துடன் மண் அணைக்க வேண்டும். சுழல் கலப்பை பொருத்திய எந்திர களையெடுக்கும் கருவியை கொண்டு களை எடுக்க வேண்டும். சால் அமைக்கும் கருவி கொண்டு மண் அணைப்பதின் மூலம் ஆட்கள் செலவை சேமிக்கிறது. தொழிலாளா் வேலைப்பளுவை குறைக்கிறது. மேற்கண்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கரும்பு பயிர் நடவு செய்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story