401 வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீசு


401 வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீசு
x
தினத்தந்தி 29 April 2022 12:33 AM IST (Updated: 29 April 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் வி.மருதூர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 401 வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் வி.மருதூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்து அதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்தது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வி.மருதூர் ஏரி மீட்பு கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் வி.மருதூர் ஏரியில் பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை நகராட்சி அதிகாரிகள் மூடினர்.மேலும் இந்த ஏரி மற்றும் ஏரியின் நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுமாறும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த ஏரி பகுதியான மணிநகர், காளியம்மன் கோவில் தெரு, ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 401 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளை, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக்கொள்ளும்படி நேற்று பொதுப்பணித்துறையினர் (நீர்வள ஆதாரம்) அறிவுறுத்தியதோடு அதற்கான நோட்டீசையும் வழங்கினர்.

Next Story