அம்மா பூங்கா சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டனர்
திருவோணத்தில் அம்மா பூங்காவின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒரத்தநாடு:
திருவோணத்தில் அம்மா பூங்காவின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுற்றுச்சுவர் இடிப்பு
தஞ்சை மாவட்டம் திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே செங்கிப்பட்டி-பட்டுக்கோட்டை பிரதான சாலை ஓரத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையின் அருகே பணிகொண்டான் விடுதி ஊராட்சியின் பராமரிப்பில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலைக்கு பின்புறம் உள்ள பூங்காவின் சுற்றுச்சுவரை நேற்று மாலை சிலர் திடீரென பொக்லின் எந்திரம் மூலம் இடித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் பூங்காவின் சுற்றுச்சுவரை இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் உரிய சட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் பூங்காவின் சுற்றுச்சுவர் இடிக்கப்படுவதாக குற்றம்சாட்டி அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவோணம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போலீசார் பொதுமக்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story