பெங்களூருவில் 3 லட்சம் பேர் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடவில்லை..!!


பெங்களூருவில் 3 லட்சம் பேர் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடவில்லை..!!
x
தினத்தந்தி 29 April 2022 1:53 AM IST (Updated: 29 April 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா 4-வது அலை பீதி உருவாகி இருக்கும் நிலையில், பெங்களூருவில் 2-வது டோஸ் தடுப்பூசி போடாமல் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு:

4-வது அலை பீதி

  பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா 4-வது அலை பீதி உருவாகி இருப்பதால், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெங்களூருவிலும் கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 2-ந் தேதி முதல் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

  கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போடுவது மட்டுமே ஒரே தீர்வு என்று அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி, பெங்களூருவில் முதல் டோஸ் தடுப்பூசியை பெரும்பாலானோர் போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதில் மக்கள் அலட்சியமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தடுப்பூசி போடாமல் 3 லட்சம் பேர்

  மாநகராட்சியின் கணக்கெடுப்புபடி பெங்களூருவில் 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கு 91 லட்சத்திற்கு மேல் மக்கள் உள்ளனர். அவர்களில் 89 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 2-வது டோஸ் தடுப்பூசி போடாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு 2-வது டோஸ் தடுப்பூசி போடாதவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கருதுகின்றனர்.

  இதையடுத்து, 2-வது டோஸ் தடுப்பூசி போடாமல் இருக்கும் 3 லட்சம் பேரையும் அடையாளம் காணவும், வீடு வீடாக சென்று மீண்டும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தவும், மக்களிடையே தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. அதே நேரத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு, வீடாக சென்று பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கும் மாநகராட்சி தீர்மானித்திருப்பதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story