பெங்களூருவில் முககவசம் அணியாவிட்டால் ரூ.250 அபராதம்...!!!
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பெங்களூருவில் முககவசம் அணியாதவர்களுக்கு வருகிற 2-ந்தேதி முதல் ரூ.250 அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் கொரோனா 4-வது அலை தொடங்கி விட்டதா என்று பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா 4-வது அலையை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பொது இடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பசவராஜ் பொம்மை அறிவுறுத்தி உள்ளார். ஆனாலும் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படாது என்று அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால், முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 2-ந்தேதி முதல் பெங்களூரு நகரில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.250 அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சியின் சுகாதாரத்துறை சிறப்பு கமிஷனர் திரிலோக் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.
அரசு உத்தரவுக்கு பின்பு பெங்களூருவில் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் முககவசம் அணிவது குறித்து மாநகராட்சியின் மார்ஷல்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இனிமேல் வருகிற 2-ந் தேதி முதல் பெங்களூருவில் பொது இடங்களில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிபவர்களிடம் இருந்து மாநகராட்சியின் மார்ஷல்கள் ரூ.250 அபராதம் வசூலிக்க உள்ளனர்.
Related Tags :
Next Story