12 டாஸ்மாக் பார்களுக்கு ‘சீல்’


12 டாஸ்மாக் பார்களுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 29 April 2022 2:22 AM IST (Updated: 29 April 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 12 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

சேலம்:-
சேலத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 12 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
டாஸ்மாக் பார்
சேலம் மாவட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே அனுமதி பெற்ற பார் வசதி உள்ளது. ஏற்கனவே பார் நடத்தி வந்தவர்களுக்கு உரிமம் வழங்காமல் வெளியூர் நபர்களின் பெயரில் புதிதாக பார் டெண்டர் விடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார் உரிமையாளர்கள் அனைவரும் பார்களை மூட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அதன்பிறகு ஏற்கனவே பார் நடத்தி வந்தவர்கள், புதிதாக பார் ஏலம் எடுத்தவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தி தற்காலிமாக பார் நடத்த அனுமதி வாங்கினர். அந்த வகையில் சேலம் மாநகரில் 28 டாஸ்மாக் பார்கள் செயல்பட்டது. இந்த பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் மது விற்பனையில் குறிப்பிட்ட தொகையை டாஸ்மாக் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான பார் உரிமையாளர்கள் அரசுக்கு தொகையை செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும், சில இடங்களில் அனுமதி பெறாமல் பார்கள் செயல்பட்டு வருவதாகவும் புகார் எழுந்தது.
சீல் வைப்பு
இந்தநிலையில், சேலம் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று இரவு சேலத்தில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பார்களை பூட்டி சீல் வைத்தனர். மேலும், அரசுக்கு பணம் செலுத்தாத பார்களும் மூடப்பட்டன. மொத்தம் நேற்று ஒரேநாளில் 12 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராஜா கூறுகையில், உரிமம் பெறாமலும், அரசுக்கு மாத தவணை செலுத்தாமலும் இருந்த 12 டாஸ்மாக் பார்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அடிவாரம் பகுதியில் அனுமதி பெறாமல் பார் நடத்தியவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும், என்றார்.

Next Story