அரசு பஸ் கண்டக்டர் பணி இடைநீக்கம்


அரசு பஸ் கண்டக்டர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 29 April 2022 2:22 AM IST (Updated: 29 April 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவியை அவமரியாதையாக திட்டியதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து அரசு பஸ் கண்டக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சேலம்:-
பள்ளி மாணவியை அவமரியாதையாக திட்டியதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து அரசு பஸ் கண்டக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பள்ளி மாணவி
சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவிகள் சிலர் நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிவடைந்ததும் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக புதிய பஸ் நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சிக்கு சென்ற அரசு பஸ்சில் அவர்கள் ஏறினர்.
இந்த பஸ்சில் கண்டக்டராக மகாலிங்கம் என்பவர் பணியில் இருந்தார். அப்போது அவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த மாணவி அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், அரசு பஸ் கண்டக்டர் மகாலிங்கம் தன்னை அவமரியாதையாக பேசியதுடன் தோள்பட்டையை பிடித்து உள்ளே போ என்று தள்ளியதாக கூறி உள்ளார்.
பணி இடைநீக்கம்
அதன்பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து சேலம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து கண்டக்டர் மகாலிங்கத்தை பணி இடைநீக்கம் செய்து சேலம் மண்டல மேலாளர் லட்சுமணன் உத்தரவிட்டார்.

Next Story