கணவர் கொல்லப்பட்ட வேதனையில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


கணவர் கொல்லப்பட்ட வேதனையில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 April 2022 2:22 AM IST (Updated: 29 April 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே கணவர் கொல்லப்பட்ட வேதனையில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓமலூர்:-
ஓமலூர் அருகே கணவர் கொல்லப்பட்ட வேதனையில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கொலை
ஓமலூர் அருகே தொளசம்பட்டி முத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகேசன் (வயது 40) லாரி டிரைவர். இவரது முதல் மனைவி சந்தியா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் ராதா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். சிவகேசனின் முதல் மனைவி மூலம் பிறந்த 2 குழந்தைகளை அவரது தம்பி வெங்கடேசன் பராமரித்து வருகிறார். 
இந்தநிலையில் சிவகேசன் குடிபோதையில் அடிக்கடி தனது தந்தை மற்றும் தம்பி வெங்கடேசனிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 22-ந் தேதி சிவகேசன் தனது தம்பி வெங்கடேசனிடம் குடிபோதையில் தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் கல்லால் சிவகேசனை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த 24-ந் தேதி உயிரிழந்தார்.
இதுகுறித்து தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணனை கொன்ற வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
தற்கொலை
இந்த நிலையில் கணவர் சிவகேசன் கொலை செய்யப்பட்டதால் மனம் உடைந்த நிலையில் அவருடைய 2-வது மனைவி ராதா மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அந்த பகுதி மக்கள் தொளசம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் கொல்லப்பட்டதால், அவருடைய மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story