அந்தியூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது; யானை வழிமறித்ததால் உறவினர்கள் பீதி


அந்தியூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது; யானை வழிமறித்ததால் உறவினர்கள் பீதி
x
தினத்தந்தி 29 April 2022 2:49 AM IST (Updated: 29 April 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. யானை வழிமறித்ததால் உறவினர்கள் பீதியடைந்தனர்.

அந்தியூர்
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தேவர்மலை கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். அவருடைய மனைவி சிவம்மாள் (வயது 25). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் சிவம்மாள் மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவருடைய உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் தேவர்மலை கிராமத்துக்கு விரைந்து வந்தது. அங்கிருந்து சிவம்மாளை ஏற்றிக்கொண்டு பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக சிவா இருந்தார். தாமரைக்கரையை அடுத்த பசுவேஸ்வரர் கோவில் என்ற இடத்தின் அருகே சென்றபோது சிவம்மாளுக்கு பிரசவவலி அதிகமானது. இதனால் ஆம்புலன்ஸ் அடர்ந்த வனப்பகுதியில் நிறுத்தப்பட்டது. உடனே சிவம்மாளுக்கு மருத்துவ உதவியாளர் சிவா பிரசவம் பார்த்தார். இதில் சிவம்மாளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தாயும், சேயும் அழைத்து செல்லப்பட்டனர். செல்லும் வழியில் சுண்டப்பூர் பிரிவு என்ற இடத்தில் பெண் யானை ஒன்று நின்று கொண்டு, ஆம்புலன்சை வழிமறித்தபடி அங்கிருந்த மூங்கில் செடிகளை தின்று கொண்டிருந்தது. யானையை கண்டதும், ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் சிவம்மாளின் உறவினர்கள் பீதி அடைந்தனர். 30 நிமிடத்துக்கு பின்னர் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய் மற்றும் குழந்தையும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

Next Story