ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி


ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி
x
தினத்தந்தி 29 April 2022 4:26 AM IST (Updated: 29 April 2022 4:26 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக பிஷப் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி:

போலீஸ் கமிஷனரிடம் புகார்
மதுரை புது ஜெயில் ரோடு, கிரம்மாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் ரமேஷ்குமார். இவர், திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபை' (டி.இ.எல்.சி.) உறுப்பினராக இருந்து வருகிறார். ரமேஷ்குமார், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-நான் டி.இ.எல்.சி. உறுப்பினராக உள்ள நிலையில் திருச்சி விமான நிலையம் அருகில் பசுமை நகரில் வசித்த எச்.ஏ.மார்ட்டின் என்பவர் டி,இ.எல்.சி. பிஷப்பாக பொறுப்பேற்றார். அவரை கடந்த 2009-ம் ஆண்டு சந்தித்தேன். அப்போது அவர், திருச்சபை சம்பந்தமாக ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு நடைபெற்று வருவதால் திருச்சபையின் இதர செலவினங்களுக்கு ரூ.1½ கோடி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றும், அதற்கு பிரதிபலனாக திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.
20 பேருக்கு ஆசிரியர் பணி
நானும் அதை நம்பி எனக்குத் தெரிந்த 20 ேபரிடம் வசூல் செய்து ரூ.1½ கோடியை பிஷப் மார்ட்டினிடம் அவரது அலுவலகத்தில் வைத்து கொடுத்தேன். அப்போது பிஷப் மார்ட்டினின் மனைவி ஜீவஜோதி, சகோதரர் ஹென்றி ராஜசேகர் ஆகியோரும் ஆசிரியர் பணி தொடர்பாக உறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி ஆசிரியர் பணி நியமனம் பெற்றுத்தரவில்லை.
இதைத்தொடர்ந்து 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி ஒரு உறுதிமொழி பத்திரம் எழுதிக்கொடுத்தார். அதன் பின்னர் பலமுறை பிஷப் மார்ட்டினை சந்தித்து ஆசிரியர் பணி குறித்து கேட்டபோது, திருச்சபை தொடர்பான வழக்குகள் முடிந்தால் தான் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நினைத்ததையெல்லாம் செயல்படுத்த முடியும். அதற்கு மேலும் ரூ.1½ கோடி தேவைப்படுகிறது என்றார். நானும் அதை நம்பி 2017-ம் ஆண்டு ஏப்ரல் 22-ந் தேதி முதல் ஜூலை மாதம் 27-ந் தேதி வரை மேலும் ரூ.1½ கோடியை பெற்றுக்கொடுத்தேன்.
ரூ.3 கோடி மோசடி
ஆனால் அவர்கள் உறுதி அளித்தபடி ஆசிரியர் பணி பெற்றுத்தராமல் ஏமாற்றி ரூ.3 கோடியை மோசடி செய்துவிட்டனர். எனவே பிஷப் மார்ட்டின், ஜீவஜோதி, ஹென்றி ராஜசேகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து ரூ.3 கோடியை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கோசலைராமன் விசாரணை நடத்தியதில், ரூ.3 கோடி மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து பிஷப் மார்ட்டின், ஜீவஜோதி, ஹென்றி ராஜசேகர் ஆகிய 3 பேர் மீதும் இ.பி.கோ. சட்டப்பிரிவு 417, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கோசலைராமன் கூறுகையில், "தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பிஷப், அவரது மனைவி மற்றும் சகோதரர் ஆகிய 3 பேரும் ஆசிரியர் பணி பெற்றுத்தருவதாக 20 பேரிடம் தலா ரூ.15 லட்சம் வீதம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர். மூவரும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். அவர்களை பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். தற்போது ஹென்றி ராஜசேகர் வெளிநாடு தப்பிச்சென்றிருப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே, விரைவில் 3 பேரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

Related Tags :
Next Story