மகளை காதலிக்க வற்புறுத்தியதை தட்டிக்கேட்ட தந்தைக்கு பாட்டில் குத்து


மகளை காதலிக்க வற்புறுத்தியதை தட்டிக்கேட்ட தந்தைக்கு பாட்டில் குத்து
x
தினத்தந்தி 28 April 2022 11:31 PM GMT (Updated: 28 April 2022 11:31 PM GMT)

மகளை காதலிக்க வற்புறுத்தியதை தட்டிக்கேட்ட தந்தைக்கு பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி:

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவிக்கு தொந்தரவு
திருச்சி முடுக்குப்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் நாகராஜ் (வயது 21). இவர் பொன்மலைபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
அந்த மாணவி பள்ளிக்கு சென்று வரும்போதும், கணினி வகுப்புக்கு சென்று வரும்போதும், நாகராஜ் வழிமறித்து, தான் அவரை காதலிப்பதாக கூறி, அந்த மாணவியை தொந்தரவு செய்துள்ளார். மாணவி காதலிக்க மறுத்ததால், நாகராஜ் கழுத்தை அறுத்துக்கொண்டும், மாணவியின் மோதிரத்தை வாங்கி வைத்துக்கொண்டும், காதலிக்க வற்புறுத்தி உள்ளார்.
பாட்டில் குத்து
இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு ஆட்டோவில் வந்தபோது, நாகராஜ் ஆட்டோவுக்குள் கையை விட்டு மாணவியை பயமுறுத்தியுள்ளார். இதனால் பயந்த மாணவி, இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.இதைத்தொடர்ந்து கடந்த 27-ந்தேதி இரவு மாணவியின் பெற்றோர் நாகராஜின் வீட்டுக்கு சென்று, நடந்த சம்பவம் குறித்து நாகராஜின் பெற்றோரிடம் புகார் தெரிவித்து, தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், அங்கிருந்த பாட்டிலை உடைத்து மாணவியின் தந்தையின் கையில் குத்திவிட்டு ஓடிவிட்டார்.
போக்சோவில் கைது
இதில் படுகாயம் அடைந்த மாணவியின் தந்தையை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து மாணவியின் தாயார் இதுபற்றி திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மாணவியை காதலிப்பதாக தொந்தரவு செய்ததை தட்டிக்கேட்ட தந்தையை பாட்டிலால் குத்திய நாகராஜ் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவல்லி தலைமையிலான போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் திருச்சி மாவட்ட மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story