தனியார் கண் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து


தனியார் கண் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 29 April 2022 6:14 PM IST (Updated: 29 April 2022 6:14 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து

வேலூர் அண்ணாசாலை ஊரீசு கல்லூரியின் எதிரே 3 மாடி வணிக வளாகம் உள்ளது. இதில் 3-வது மாடியில் தனியார் கண் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த நிலையில்  காலை 9 மணியளவில் மருத்துவமனையில் பேட்டரி மற்றும் இன்வெட்டர் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்து வெளியே வந்த புகைமூட்டம் மருத்துவமனை வளாகம் முழுவதும் பரவியது.

இதனால் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்து பலர் அலறியடித்தப்படி வெளியே ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நோயாளிகள் பத்திரமாக மீட்பு

அதன்பேரில் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் உடனடியாக அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அந்த கட்டிடத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் முன்எச்சரிக்கையாக மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த 10 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.

தீயணைப்பு வீரர்களின் சிறிதுநேர பேராட்டத்துக்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில் பேட்டரி, இன்வெட்டர் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. பேட்டரிகள், இன்வெட்டர் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீக்காயம் இன்றி அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். 

இந்த தீ விபத்து குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story