ரசாயனங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
ரசாயனங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை
ரசாயனங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயிற்சி
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஓ.என்.ஜி.சி. மங்களூரு பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளால் பென்சீன் போன்ற ரசாயனங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும்போது கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அதிகாரிகள் பேசியதாவது:-
தீயணைப்பான்களை மட்டும்...
பென்சீன் என்ற ரசாயனம் தண்ணீரை விட அடர்த்தி குறைவானது. எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மையுடன் இருக்கின்ற காரணத்தினால் விபத்து ஏற்பட்ட உடனேயே இந்த ரசாயனத்தை உடனடியாக பம்ப் செய்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். தீ விபத்து நேரிடும் பட்சத்தில் இதனை அணைக்க தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் தண்ணீரை பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறான விபத்துக்கள் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளை கையாள்வதற்கு என நிறுவனத்தில் பிரத்தியேகமாக ஆட்கள் உள்ளனர். இந்த சூழ்நிலையை கையாள்வதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கும்.
தடுப்பு அமைக்க வேண்டும்
ரசாயனங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் எந்த வகையான ரசாயனம் உள்ளது என்ற விவரங்கள் ஒட்டப்பட்டிருக்கும். விபத்து நேரிட்டால் 100 மீட்டர் தொலைவிற்கு முன்பாக தடுப்பு அமைக்க வேண்டும். நீர்நிலைகளில் ரசாயனம் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றனர்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், தலைமை மேலாளர்கள் பிரமோத், வீரேந்திர தியாகி, ஓ.என்.ஜி.சி. மேலாளர் கோபிநாத், வருவாய் கோட்டாட்சியர்கள், தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், அனைத்து தாசில்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story