மீஞ்சூர் அருகே ஆட்டோ டிரைவர் படுகொலை
மீஞ்சூர் அடுத்த நாப்பாளையம் கிராமத்தில் ஆட்டோ டிரைவரை படுகொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆட்டோ டிரைவர்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வெள்ளிவாயல் சாவடி ராமானுஜர் தெருவில் வசித்து வந்தவர் ரவிச்சந்திரன் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி கீர்த்தனா (24) என்கிற மனைவியும், 1½ வயது குழந்தையும் உள்ளனர். இவர் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். இதனால் மனைவி ஏன் வேலைக்கு செல்லவில்லை? என்று கேட்டு உள்ளார்.
அதற்கு, எனக்கும் நாப்பாளையம் பகுதியை சேர்ந்த மதன் என்பவருக்கும் தகராறு இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதன் (27), பப்லு (27), ஜெயபிரகாஷ் (24), பரத் (26) ஆகிய 4 பேரும் ரவிச்சந்திரனை வீட்டிற்கு வந்து மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளனர்.
படுகொலை
பின்னர் நீண்ட நேரமாகியும் கணவன் வீட்டிற்கு வராததால் கீர்த்தனா, தனது உறவினர்கள் 3 பேருடன் சேர்ந்து நாப்பாளையம் கிராமம், வெற்றி நகர் பகுதியில் உள்ள எம்.ஆர்.எப். மைதானத்திற்கு சென்று தேடி உள்ளனர். அப்போது அங்கு ரவிச்சந்திரன் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அங்கே மதன் மற்றும் கூட்டாளிகள் மதுபான பாட்டில் மற்றும் கத்தியுடன் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் கீர்த்தனா மற்றும் உறவினர்களை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுபற்றி மணலி புதுநகர் போலீஸ் நிலையத்தில் கீர்த்தனா புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
4 பேர் கைது
இதுகுறித்து அம்பத்தூர் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் மணலிபுதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடிராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் சங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இடையஞ்சாவடி அரசு பள்ளி அருகே மைதானத்தில் பதுங்கியிருந்த மதன், பப்லு, ஜெயபிரகாஷ், பரத் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த கத்தி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேரையும் பொன்னேரி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story