ஊட்டியில் காலாவதியான 100 கிலோ இறைச்சி பறிமுதல்
ஊட்டியில் காலாவதியான 100 கிலோ இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ஊட்டி
ஊட்டியில் காலாவதியான 100 கிலோ இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
அதிரடி சோதனை
நீலகிரி மாவட்டத்தில் கோடை கால சீசனையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதால் தங்கும் விடுதிகள் நிரம்பி காணப்படுகின்றன. இந்தநிலையில் ஓட்டல்களில் காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் தயாரித்து சுற்றுலா பயணிகளுக்கு வினியோகம் செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்பேரில் நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவராஜ், நந்தகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஊட்டி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். இதில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவுப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
100 கிலோ பறிமுதல்
ஊட்டியில் கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து பாரதியார் காம்ப்ளக்ஸ், கமர்சியல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் அதிரடி சோதனை செய்யப்பட்டது. இதில் 7 கடைகளில் கெட்டுப்போன கறிக்கோழி இறைச்சி, அரிசி சாதம், சப்பாத்தி மாவு மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் என 100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து 7 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு தலா ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. கெட்டுப்போன உணவுப் பொருட்களைத் சாப்பிடுவதால் சுற்றுலா பயணிகளின் உடல்நலம் பாதிக்கப்படும். எனவே காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story