புன்னக்காயலில் கூடுதல் குடிநீர் திட்டத்துக்கு ரூ.1.67 கோடி ஒதுக்கீடு - கலெக்டர்
புன்னக்காயலில் கூடுதல் குடிநீர் திட்டத்துக்கு ரூ.1.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கிராமத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 24-ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. அதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இங்கு சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். இதனை சரிசெய்ய திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.
மேலும் இங்கு நிரந்தர குடிநீர் வசதி கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அனைவருக்கும் சீரான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புன்னக்காயல் ஊராட்சியில் கூடுதல் குடிநீர் திட்டத்திற்காக ரூ.1.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
மேலும் இங்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 403 வீடுகள் ஊராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஊராட்சியில் 87 பேருக்கு வீட்டுமனை பட்டா ஒதுக்கீடு செய்து முதல்கட்டமாக 7 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story