எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 April 2022 10:10 PM IST (Updated: 29 April 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

உடுப்பி டவுனில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்

மங்களூரு: உடுப்பி டவுனில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
போலீஸ் ஏட்டு

உடுப்பி மாவட்டம் பைந்தூரில் வசித்து வந்தவர் ராஜேஷ்(வயது 40). இவர், மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பிரிவில் போலீஸ் ஏட்டுவாக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் ஏட்டு ராஜேஷ், உடுப்பி டவுன் ஆதி உடுப்பி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். 
 
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இந்த சந்தர்ப்பத்தில் ராஜேஷ் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் தலையில் குண்டு பாய்ந்து கீழே விழுந்த ராஜேஷ் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அங்கிருந்த சக போலீசார், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

தகவல் அறிந்து உடுப்பி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடைேய விஷயம் அறிந்து உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். 
 
தற்கொலைக்கான காரணம்?

போலீஸ் ஏட்டு ராஜேஷ் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. பணிச்சுமையா அல்லது குடும்ப பிரச்சினை உள்பட வேறு ஏதேனும் தற்கொலைக்கு காரணமா என்பதும் தெரியவில்லை. 

இதுகுறித்து உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உடுப்பி டவுனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story