திருப்பூர் மாநகரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருப்பூர் மாநகரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. விடுபடாமல் அனைவரும் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வீடு, வீடாக கணக்கெடுப்பு பணியும் நடக்கிறது.
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
கொரோனா பரவலை தடுக்கும் முக்கிய கவச ஆயுதமாக கொரோனா தடுப்பூசி விளங்கி வருகிறது. இதனால் விடுபடாமல் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துமாறு அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி பணிகள் முடுக்கி விடப்பட்டு இன்று (சனிக்கிழமை) 138 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 12 வயதுக்கு முதல் 14 வயதுக்கு உட்பட்ட 31 ஆயிரத்து 778 பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இதில் 15 ஆயிரத்து 59 பேருக்கு முதல் தவணையும், 2 ஆயிரத்து184 பேருக்கு 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு 42 ஆயிரத்து 300 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 33 ஆயிரத்து 982 பேர் முதல் தவணையும், 25 ஆயிரத்து 873 பேருக்கு 2-வது தவணையும் செலுத்தப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 8 லட்சத்து 67 ஆயிரத்து 420 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 7 லட்சத்து 53 ஆயிரத்து 796 பேருக்கு முதல் தவணையும், 5 லட்சத்து 65 ஆயிரத்து 580 பேருக்கு இரண்டாவது தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக 4 ஆயிரத்து 219 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வீடு, வீடாக கணக்கெடுப்பு
ஒவ்வொரு சனிக்கிழமையும், மாநகராட்சி பகுதியில் 138 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 550 பேர் இந்த முகாமில் பணியாற்றி வருகிறார்கள். மற்ற நாட்களில் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. திங்கட்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிக்கு உட்பட்ட பகுதியில் நகர சுகாதார செவிலியர்கள், தேசிய பள்ளி சிறார் நலத்திட்டம் மற்றும் நடமாடும் மருத்துவக்குழு மூலமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது.
தடுப்பூசி தொடர்பான விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்வதற்காக மாநகராட்சியில் 2 தொலைதொடர்பு ஆலோசனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. துப்புரவு பணியாளர்கள், மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலமாக வீடு, வீடாக கணக்கெடுப்பு செய்து தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் கடந்த 11-ந் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் குணமடைந்துள்ளனர். அதன்பிறகு தொற்று பாதிப்பு இல்லை. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story