ஆண்டிப்பட்டி போலீஸ் குடியிருப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு சாப்பிட அழைத்த பெண் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்தார்


ஆண்டிப்பட்டி போலீஸ் குடியிருப்பில்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு  சாப்பிட அழைத்த பெண் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்தார்
x
தினத்தந்தி 29 April 2022 10:13 PM IST (Updated: 29 April 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி போலீஸ் குடியிருப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். அப்போது தன்னை சாப்பிட அழைத்த பெண் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்தார்.

தேனி:

முதல்-அமைச்சர் திடீர் ஆய்வு
தேனியில் நாளை (சனிக்கிழமை) நடக்கும் அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று தேனி மாவட்டத்துக்கு வந்தார். வரும் வழியில் ஆண்டிப்பட்டி பஸ் நிலையம் அருகில் தொண்டர்கள் அளித்த உற்சாக வரவேற்பை அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆண்டிப்பட்டியில் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு அருகில் வேனில் இருந்து இறங்கி, குடியிருப்பு பகுதிக்குள் திடீரென சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டுக்குள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டார். முதல்-அமைச்சரின் திடீர் வருகையை கண்டு குடியிருப்புகளில் வசித்தவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

தண்ணீர் கேட்டார்
பின்னர் அங்கிருந்தவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தங்கள் வீட்டில் சாப்பிட்டு செல்லும்படி அன்போடு கேட்டார். அதற்கு அவர், "வீட்டில் இரவு என்ன சாப்பாடு" என்று கேள்வி கேட்டார். உடனே அந்த பெண், தோசை என்று கூறினார்.
இதையடுத்து அவரிடம், "எனக்கு குடிக்க தண்ணீர் மட்டும் கொடுங்கள்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார். உடனே அந்த பெண் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கி குடித்துவிட்டு அந்த பெண்ணிடம் நன்றி கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

அந்த போலீஸ் குடியிருப்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அதன் நுழைவு வாயிலில் இதுகுறித்த கல்வெட்டு உள்ளது. அந்த கல்வெட்டையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து வைகை அணை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டார்.
இந்த ஆய்வின்போது, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடனிருந்தார்.



Next Story