குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவியுங்கள்


குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவியுங்கள்
x
தினத்தந்தி 29 April 2022 10:14 PM IST (Updated: 29 April 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவியுங்கள் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பது தொடர்பாக பல்வேறு இடங்களில் இருந்து புகார்கள் வருகிறது. அதாவது, 18 வயது நிறைவடையாத பெண் குழந்தை 21 வயது நிறைவடையாத ஆண் குழந்தைக்கு திருமணம் நடந்தால், அது குழந்தை திருமணம் ஆகும்.
குழந்தை திருமணம் செய்வதால் படிக்கும் பருவத்தில் கல்வி அறிவு தடைபட்டு தன்னம்பிக்கை குறைவு போன் றவை ஏற்படுகிறது. மேலும் உடல் ரீதியாக கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாத காரணத்தினால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படவும், எடைக்குறைவான குழந்தை பிறக்கவும், தாய் சேய் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

தண்டனை

குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் உண்டு. 18 வயது நிறைவடையாத பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் குற்றவாளி ஆவார். அதே போல 21 நிறைவடையாத ஆண்களை திருமணம் செய்யும் பெண்ணும் குற்றவாளி ஆவார்.
குழந்தை திருமணத்தை நடத்தியவர் மற்றும் குழந்தை திருமணம் நடத்த தூண்டியவர், குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், அச்சக உரிமையாளர், மந்திரம் ஓதுபவர், மண்டப உரிமையாளர் உள்பட அனைவரும் குற்றவாளி ஆவர்.

தகவல் தெரிவிக்க வேண்டும்

வருகிற 3-ந்தேதி அட்சய திருதியையொட்டி ஆங்காங்கே திருமணங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. உங்கள் பகுதியில் நடைபெறும் குழந்தை திருமணங்கள் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டும்.
தங்களது கிராமங்களில் குழந்தை திருமணம் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும், மேலும் குழந்தை திருமணம் பற்றிய தகவல்களை சைல்டு லைன் இலவச அழைப்பு எண் 1098 மற்றும் பெண்கள் பாதுகாப்பு உதவி எண் 181 தெரிவிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story