குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி நாகையில் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி நாகையில் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் வெளிநடப்பு
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியவுடன் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு, நிலக்கடலை ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள், கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-
குடிநீர் இணைப்பு
பாலையூர் தமிழ்ச்செல்வன்:- தெத்தி ஊராட்சியில் இருந்து வடகுடி, பெருங்கடம்பனூர், சங்கமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பெருங்கடம்பனூர் கடைத்தெருவில் இருந்து மின்மோட்டார் அமைக்கப்பட்டு பாலையூர் ஊராட்சிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பெருங்கடம்னூர் ஊராட்சிக்கு என்று தனியாக குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாலையூர் ஊராட்சிக்கு குடிநீர் வழங்க பெருங்கடம்பனூர் கடைத்தெருவில் அமைக்கப்பட்டுள்ளகுடிநீர் இணைப்பில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பாலையூர் ஊராட்சிக்கு குடிநீர் கிடைப்பதில்லை. எனவே குடிநீா் திருட்டை தடுத்து, பாலையூர் ஊராட்சிக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிர்க்காப்பீட்டு தொகை
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் சரபோஜி:- பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக உளுந்து, பயறு, நிலக்கடலை ஆகியவை100 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
2020-2021-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக வழங்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனைக்கு வராமல் தடுத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நவீன நெல் அரவை நிலையம்
காவிரி டெல்டா பாசன அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணை செயலாளர் பிரபாகரன்: குளத்தில் இலவசமாக மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். நடப்பாண்டு முன் கூட்டியே ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்தால், குறுவை சாகுபடி நெல்லை மழைக்கு முன்னரே அறுவடை செய்ய உதவியாக இருக்கும்.
நாகை மாவட்டத்தில் நவீன நெல் அரவை நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
Related Tags :
Next Story