தாயார் மற்றும் குழந்தையுடன் பெண் ஒருவர் காண்டூர் கால்வாயில் குதித்து தற்கொலை
தாயார் மற்றும் குழந்தையுடன் பெண் ஒருவர் காண்டூர் கால்வாயில் குதித்து தற்கொலை
தளி,
உடுமலை அருகே தாயார் மற்றும் குழந்தையுடன் பெண் ஒருவர் காண்டூர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளம்பெண்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த வீ.வேலூரைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 60). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நாகரத்தினம் (56).
இவர்களது மகள் கோகிலா (30). இவரது கணவர் பாலகுருசாமி. இந்த தம்பதிக்கு தட்சயா (5) என்ற பெண் குழந்தை உண்டு. கோகிலா தனது குழந்தை மற்றும் கணவனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கோகிலாவிற்கு மன நல பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் மன நல பாதிப்பு குணமாகவில்லை. இதனால் அவருடைய கணவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்த கோகிலா குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
ஒரு பக்கம் மன நிலை பாதிப்பு, மறுபக்கம் கணவர் பிரிந்து சென்றது போன்ற காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்த கோகிலா மற்றும் அவரது தாய் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளனர்.
குழந்தைக்கு உடல் நலம் பாதிப்பு
இந்த நிலையில் கோகிலாவின் மகள் தட்சயாவுக்கு நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்க கோகிலா தனது தாயாருடன் உடுமலையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்தார். அதன் பின்பு 3 பேரும் அங்கிருந்து பஸ் மூலம் திருமூர்த்தி அணைக்கு சென்றனர். அங்கு அணைப்பகுதியில் காண்டூர் கால்வாய் வந்து சேரும் இடத்துக்கு வந்தனர்.
பின்னர் கோகிலா தனது குழந்தையை இடுப்பில் உள்ள சேலையில் சேர்த்து கட்டிக்கொண்டு காண்டூர் கால்வாயில் குதித்தார். அவரை தொடர்ந்து அவருடைய தாயார் நாகரத்தினமும் குதித்தார்.
கால்வாயில் தண்ணீர் அதிக அழுத்தத்தில் வந்து கொண்டு இருப்பதால் 3 பேரையும் தண்ணீர் இழுத்து சென்றது. 3 பேரும் கால்வாயில் குதித்ததை பூங்காவுக்கு சுற்றுலா வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து தளி போலீஸ் நிலையத்திற்கும், உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
பிணமாக மீட்பு
உடனே தளி போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று திருமூர்த்தி அணை பகுதியில் படகில் சென்று தேடினர். 2 மணி நேர தேடலுக்கு பிறகு நாகரத்தினம், கோகிலா மற்றும் குழந்தை தட்சயா ஆகிய 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். பின்னர் 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தாய் மற்றும் குழந்தையுடன் பெண் காண்டூர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உடுமலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story