திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவதில் பல உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வரும் நிலை


திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவதில் பல உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வரும் நிலை
x
தினத்தந்தி 29 April 2022 5:03 PM GMT (Updated: 29 April 2022 5:03 PM GMT)

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவதில் பல உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வரும் நிலை

போடிப்பட்டி, 
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவதில் பல உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வரும் நிலையில் அதனை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பை மலைகள்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது‘பெருகி வரும் மக்கள் தொகையால் பல புதிய குடியிருப்புகள் உருவாகி வருகிறது.அதேநேரத்தில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் வெளியேற்றமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.இந்தநிலையில் திடக்கழிவுகளை அப்புறப்படுத்துவது உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. குப்பைகளைக் கையாள்வதற்கென உருவாக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில் பல ஊராட்சிகள் அக்கறை காட்டவில்லை. இதனால் பல கிராமங்களில் குப்பை மலைகள் உருவாகி சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. 
பல கிராமங்களில் வீடுகள் தோறும் சென்று சேகரிக்கும் பணிகள் முடங்கியுள்ளது. மேலும்  மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிப்பதற்காக அமைக்கப்பட்ட தரம் பிரிக்கும் அறைகள் பயன்பாடில்லாமல் வீணாகி வருகிறது.அத்துடன் மக்கும் குப்பைகளிலிருந்து மண்புழு உரம் தயாரிக்க அமைக்கப்பட்ட தொட்டிகளில் கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடுகளை உருவாக்கி வருகிறது. மேலும் கட்டிடக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு முறையான வழிகாட்டல்கள் வழங்கப்படாததால் அவற்றை நீர் நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொட்டுகின்றனர்.இதனால் நீராதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
சங்கிலித் தொடர்
பல கிராமப் பகுதிகளில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு பதிலாக சுகாதாரப் பணியாளர்களே அவற்றை நெருப்பு வைத்து எரிக்கும் அவலம் அரங்கேறுகிறது.குப்பையில் கலந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள் எரியும்போது புகைமூட்டம் ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகள் ஏற்படுகிறது. மேலும் நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள் நீருடன் கலந்து நீர்நிலைகளைப் பாழாக்குகிறது. இதனால் நிலத்தடி நீராதாரங்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
 குப்பைகளால் ஏற்படும் பிரச்சினைகள் என்பது சங்கிலித்தொடர் போல ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். இதனைக் கருத்தில் கொண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதாரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்'என்று அவர்கள் கூறினர்.

Next Story