குருமகா சன்னிதானம் பாதயாத்திரை புறப்பட்டார்
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் குடமுழுக்கையொட்டி குருமகா சன்னிதானம் பாதயாத்திரை புறப்பட்டார்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் வருகிற மே மாதம் 8-ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்வதற்காக தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் வழிபாட்டு கடவுளாகிய சொக்கநாதபெருமானுடன் நேற்று மாலை தருமபுரம் ஆதீனத்தில் இருந்து குருலிங்க சங்கம பாதயாத்திரையாக புறப்பட்டார். தொடர்ந்து மாயூரநாதர் கோவிலில் தருமை ஆதீனம் வழிபட்டார். முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சித்தர்க்காடு சிற்றம்பல நாடிகள் சாமி கோவிலில் இரவு சொக்கநாதபெருமானை எழுந்தருள செய்து குருமகா சன்னிதானம் வழிபாடு நடத்தினார். இன்று(சனிக்கிழமை) மாலை சித்தர்க்காட்டில் இருந்து புறப்பட்டு குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு யாகசாலை பூஜையை தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து வருகிற 8-ந் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் வந்து சேருகிறார்.
Related Tags :
Next Story