சீகன்பால்கு அருங்காட்சியகத்தில் ஓவிய கண்காட்சி
சீகன்பால்கு அருங்காட்சியகத்தில் ஓவிய கண்காட்சி தொடங்கியது
பொறையாறு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள தமிழறிஞர் வரலாற்று சிறப்புமிக்க சீகன்பால்கு அருங்காட்சியகத்தின் மேல்தளத்தில் "ரேகை" என்ற தலைப்பில், ஓவியம் மற்றும் சிற்ப கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சிக்கு திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரி பேராசிரியர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலய ஆயர் சாம்சன் மோசஸ் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். சீகன்பால்கு அருங்காட்சியகத்தின் இயக்குனர் டாக்டர் சாமுவேல் மனுவேல், தரங்கம்பாடி-டேனிஷ் அருங்காட்சியக இயக்குனர் சங்கர் மற்றும் அலுவலர்கள், ஓவியக்கல்லூரி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் கும்பகோணம் மற்றும் சென்னையில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரியில் பயின்று வரும் ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள், ஆயில் கலர் ஓவியங்கள் மற்றும் உலோகம், பைபர் சிலைகள், தகட்டு சிற்பம், பழமையை போற்றும் வகையில் சுடுமண் சிலைகள் போன்ற பல வகையான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இக்கண்காட்சியை பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டணமின்றி பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story