குலசேகரம் பேரூராட்சியில் பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


குலசேகரம் பேரூராட்சியில் பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 29 April 2022 11:53 PM IST (Updated: 29 April 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் பேரூராட்சியில் பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குலசேகரம், 
குலசேகரம் பேரூராட்சியில் பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
பேரூராட்சி கூட்டம்
குலசேகரம் பேரூராட்சிக் கூட்டம் தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ் தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் லிசி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஜோஸ் எட்வர்ட் உள்பட 17 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் அரசுமூடு விளையாட்டு மைதானம் முன்பக்கம் வாரம் ஒருமுறை கூடும் மாட்டு சந்தையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என 8-வது வார்டு கவுன்சிலர் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து பேரூராட்சிக்கு சொந்தமான பொதுச் சந்தையில், வாரத்திற்கு ஒரு நாள் மாட்டுச் சந்தை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உள்ளிருப்பு போராட்டம்
இதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் ராதா தங்கராஜ், ராஜையன், சிவகுமார், சந்தோஷ், தங்கப்பன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுச் சந்தையில் மாட்டுச் சந்தை அமைத்தால்  பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்றும், சந்தைப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்றும் கூறினர்.
அத்துடன் இந்த தீர்மானத்தை எதிர்த்து பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
காலையில் ெதாடங்கிய போராட்டம் மாலை வரை நீடித்தது. தகவல் அறிந்த திருவட்டார் தாசில்தார் தினேஷ் சந்திரன், தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், குலசேகரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷேக் அப்துல் காதர் ஆகியோர் நேரடியாக வந்து பா.ஜனதா கவுன்சிலர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் முடிவு எதுவும் ஏற்படவில்லை. 
இதற்கிடையே இரவு 7 மணியளவில் போராட்டம் நடத்தியவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா மாவட்டத் தலைவர் தர்மராஜ் உள்பட பா.ஜனதாவினர் பேரூராட்சி அலுவலகம் அருகில் திரண்டனர்.
பேச்சுவார்த்தை
இந்தநிலையில் இரவு 7.30 மணியளவில் பேரூராட்சிகளில் உதவி இயக்குனர் குற்றாலிங்கம் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு நடத்தினார். அப்போது, வருகிற 4 -ந் தேதி பேரூராட்சி அலுவலத்தில் வைத்து அனைத்து கவுன்சிலர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கலாம் என்று கூறினார். இதற்கு பா.ஜனதா கவுன்சிலர்கள் உடன்பட்டதையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக கூறி கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story