கீரமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது


கீரமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2022 6:50 PM GMT (Updated: 2022-04-30T00:20:44+05:30)

கீரமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் ரொக்கம், 13 செல்போன்கள் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கீரமங்கலம், 
சூதாட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக பல்வேறு புகார் வந்தன. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தனிப்படைகளை அமைத்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார். 
இந்தநிலையில், கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம்- மறமடக்கி எல்லையில் உள்ள தைலமரக்காட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
11 பேர் கைது
அப்போது போலீசாரை கண்டதும் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இருப்பினும் 11 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அறந்தாங்கி பாரதியார் நகரை சேர்ந்த சரவணன் (வயது 40), குளவாய்ப்பட்டியை சேர்ந்த முத்து (27), முத்துராமன் (45), நெய்வத்தளி கதிரவன் (29), மறமடக்கி ரகு (35), சரவணன் (35), ராம்குமார் (35), சிவகங்கை மாவட்டம் தட்டாக்குடியை சேர்ந்த கூத்தப்பெருமாள் (40), நெடுங்குடி கைலாசபுரத்தை சேர்ந்த ராசு (40), சிலட்டூரை சேர்ந்த ரஞ்சன் (44), ராஜாஜி (39) என்பது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டுக்கட்டுகள், ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 873 ரொக்கம் மற்றும் 13 செல்போன்கள், 7 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story