ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா


ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா
x
தினத்தந்தி 30 April 2022 12:21 AM IST (Updated: 30 April 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகேயுள்ள திருமலை மடை கருப்பசாமி கோவிலில் நடந்த வினோத திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று 223 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

சிவகங்கை 

சிவகங்கை அருகேயுள்ள திருமலை மடை கருப்பசாமி கோவிலில் நடந்த வினோத திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று 223 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்

சிவகங்கை அருகே திருமலை கோனேரிப்பட்டி ஊராட்சியில் மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் அருகே மடைகருப்பசாமி கோவில் உள்ளது. 300 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில் வினோதமான முறையில் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மட்டும் சித்திரை முதல் தேதி காப்பு கட்டி விரதம் மேற்கொள்வர்.
இந்த ஆண்டு கடந்த 14-ந்தேதி காப்பு கட்டி ஆண்கள் விரதம் தொடங்கினர். திருவிழா தொடங்கியதும், கோவில் வளாகத்தின் அருகே உள்ள கண்மாயில் அனைத்து மடைகளும் அடைக்கப்பட்டன.

223 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்

16-ம் நாளான நேற்று மதியம் .1.30 மணிக்கு திருமலையிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு புறப்பட்டனர். நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய அரிவாள், மணி, கருப்பு நிற வெள்ளாடுகளுடன் அவர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் மலை கொழுந்தீஸ்வரர் கோவிலில் தீர்த்தம் எடுத்து வந்து ஒரு மண் பானையில் பொங்கலிட்டனர்.
தொடர்ந்து 223 ஆடுகளை வரிசையாக பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பச்சரிசி சாதம் சமைக்கப்பட்டது. பொங்கல், சமைத்த இறைச்சி, ஆடுகளின் தலைகளை சுவாமி முன் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.  நள்ளிரவு 1 மணியளவில் பல்லியின் அசரீரி கேட்டதும் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. விழாவில் மதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.

Next Story