தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நிழற்குடை அமைக்கப்படுமா?
அரியலூர்-ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது பெரிய நாகலூர் பாதை. பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் இந்த பாதைக்கு வந்து அரசு பஸ்களில் ஏறி அரியலூருக்கு சென்று படித்து வருகின்றனர். ஆனால் மேற்படி பாதையில் இரு புறமும் பயணியர் நிழற்குடை இல்லை. இதனால் மாணவர்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் நீண்ட நேரமாக பஸ்களுக்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் பாதுகாப்பாக ஒதுங்கி நிற்க கூட இடம் இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வி.கைகாட்டி(பாலக்கரை), அரியலூர்.
குண்டும், குழியுமான சாலை
பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை ஆங்காங்கே சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பதனால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
எரியாத மின் விளக்குகள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா, கோபாலப்பட்டினம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரியாததால் சாலையில் செல்லும் பெண்கள் பெரிதும் அச்சத்துடனேயே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரத்தில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் .
பொதுமக்கள், கோபாலப்பட்டினம், புதுக்கோட்டை.
குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா?
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சேங்கல் ஊராட்சி மாணிக்கபுரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி அதில் இருந்து குழாய்கள் மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆதிதிராவிடர் காலனியில் இருந்து ஜெகதாபி செல்லும் சாலையில் உள்ள குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மாணிக்கபுரம், கரூர்.
Related Tags :
Next Story